அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 471 நாட்களுக்குப் பின், அமர்வு நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த தடையும் இல்லை, விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் 2024 செப்.28-ம் தேதி அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, ‘அமைச்சர் பதவியில் இல்லை எனக்கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றுள்ளார். சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் பணமோசடி வழக்குகளில் அரசுப்பணியாளர்கள் சாட்சிகளாக உள்ள நிலையில், அவர் அமைச்சராக பதவியில் நீடிக்க விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.