கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே ஆட்டுவித்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆங்காங்கே உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் பல ஆயிரம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும் மாநில அரசும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அவசர கால நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்றை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மருத்துவமனைகள் அவசர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலும் மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் 7 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்றிருப்பது சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்