திருச்சி அருகே திருத்தலையூரில் வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருத்தலையூர் தெற்கு தெருவை சார்ந்தவர் நல்லத்தம்பி மகன் தமிழ்ச்செல்வன் வயது 23. இவர் ஒப்பந்த கூலி அடிப்படையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி பிரச்சனையிருந்து வந்துள்ளது. இதற்கு பல்வேறு வகையான மருந்துகள் எடுத்தும் இந்த வயிற்று வலி தீர்ந்தபாடில்லை இதனால் தீவிர மன உளைச்சலில் இருந்திருக்கிறார் தமிழ்ச்செல்வன். கடந்த ஆறாம் தேதி இவருக்கு மீண்டும் வயிற்று வலி வரவே துடிதுடித்து போய் உள்ளார். இந்த வயிற்று வலி அடிக்கடி வந்து தீராத தொல்லை கொடுத்து இருக்கிறது இந்த வலியால் சாவதை விட ஒரே அடியாக சாவதே மேல் என நினைத்த தமிழ்ச்செல்வன் அன்று மாலை 3 மணிக்கு வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரையின்படி திருச்சி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் தமிழ்ச்செல்வன்.
திருச்சி அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த அவர் கடந்த 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அதிகாலை மூன்று மணி அளவில் உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தீராத வயிற்று வலியினால் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.