கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் காவல்துறையினர் நேற்று சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்; காவல்துறை விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல் துறையினரே காரணம்.
என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். காவல்துறை விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினர். இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்த போது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது.
என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும் போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும். கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது என்றார்.