பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், தங்களுடைய குழந்தைகளை மற்றவர்களை நம்பி, வீட்டை விட்டு வெளியே அனுப்ப தயங்குவார்கள். ஆனால், அவர்கள் பெண் பிள்ளைகளை தைரியத்துடன், நம்பி அனுப்பும் ஒரே இடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை தான். ஆனால், அங்கே பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் துயரத்தை சொல்வதற்கான வார்த்தைகள் தென்படவில்லை.
இப்படி பல பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளிலும் பாலியல் சீண்டல்கள் நடந்து வருகிறது. சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் இது போன்ற பாலியல் சீண்டல் வெளியே தெரிந்து விடுகிறது. ஆனாலும், பல்வேறு பள்ளிகளில் இன்னமும் இந்த துயரம் வெளியே தெரியாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ஒரு பள்ளியில் யோகேஷ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆசிரியரின் இந்த செயலால் அதிர்ந்து போன அந்த மாணவி, அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
பின்பு எதிர்பாராத நேரத்தில் ஆசிரியர் ஒருவரே தன்னிடம் இப்படி தவறான முறையில் நடந்து கொண்டது குறித்து, அந்த மாணவி தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். ஆகவே இது குறித்து சக மாணவ, மாணவிகள் அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பியபோது அவர்களிடம் இது பற்றி தெரிவித்துள்ளார் அந்த பாதிக்கப்பட்ட மாணவி.
பின்பு அந்த மாணவிக்கு தைரியம் சொன்ன சக மாணவ, மாணவிகள் அந்த மாணவியுடன் சென்று, பள்ளி தலைமை ஆசிரியரிடம் அந்த மாணவிக்கு நடந்த கொடுமையை பற்றி தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன தலைமை ஆசிரியர் உடனடியாக இது பற்றி அந்த ஆசிரியரை அழைத்து கண்டித்துள்ளார்.
அதன் பிறகு அந்த பாதிக்கப்பட்ட மாணவி, இந்த சம்பவம் குறித்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவுடன், தன்னுடைய பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ந்து போன அந்த மாணவியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை மையமாகக் கொண்டு, காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தயாராகினர். அதன்படி, மறுநாள் அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்ற காவல்துறையினர், அங்கே இந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் யோகேஷை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.