Extreme heat: நாட்டின் 76 சதவீத மக்கள், அதிகம் முதல், மிக அதிக வெப்ப அபாயத்தில் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான, டெல்லியை சேர்ந்த சி.இ.இ.டபிள்யூ., எனப்படும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் சிந்தனைக்குழாமின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் அதிக வெப்பமான பகலை விட, அதிக வெப்பம் நிறைந்த இரவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோவில் அதிகாலையில் நிகழும் வெப்பம் 6 – 9 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதீத வெப்பமுள்ள இரவுகள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த அதீத வெப்பத்தால், 3.50 கோடி நிரந்தர வேலை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்தை, 2030ல் இந்தியா இழக்கும் அபாயம் உள்ளது. இரவு நேர வெப்பம் நீடிப்பது, நகர்ப்புறங்களிலேயே அதிகம். மேலும், தமிழகம், டெல்லி, கோவா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, மத்திய பிரதேசம்,உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதீத வெப்ப அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.