தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
தெலுங்கானாவின் முலுகு பகுதியை மையமாக வைத்து, 40 கி.மீ., ஆழத்தில் நேற்று காலை 7:27 மணிக்கு சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, 5.3 ரிக்டர் அளவில் வாரங்கல், கொட்டகுடேம், பத்ராசலம், கம்மம் மற்றும் பிற பகுதிகளில் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், வீடுகள், கடைகளை விட்டு அச்சத்துடன் வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நிலநடுக்கத்தால் சில வினாடிகளுக்கு அதிர்ந்தது பதிவாகியுள்ளது. சிலர் வீட்டின் அலமாரிகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து, தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி பூர்ணசந்திர ராவ் கூறுகையில், “ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது அரிதான ஒன்று. இதற்கு முன், 1969ல் ஆந்திராவின் பத்ராசலத்தில் 5.7 ரிக்டர் அளவில் சில வினாடிகளுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ”தற்போது ஏற்பட்ட 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், அடுத்த சில நாட்களுக்கும் அதிர்வுகள் உருவாகலாம்; இருப்பினும் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை,” என்றார். மஹாராஷ்டிராவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.