முன்பெல்லாம் ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொண்ட தகவலை கேட்டிருப்போம். ஆனால் தற்போது ஆண்கள் ஒரு திருமணத்தை செய்து கொண்டு அந்த ஒரு திருமணத்தாலையே வாழ்க்கை மொத்தத்தையும் வெறுத்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு வாழ்க்கை அவர்களை புரட்டி போட்டு விடுகிறது.
ஆனால் இந்த சமூகத்தில் இன்னொரு விதமான ஆண்களும் இருக்கிறார்கள். அதாவது திருமணத்தை செய்து கொண்டு, அந்த பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி குடும்பத்துடன் இருப்பதைப் போல காட்டி விட்டு பின்பு தன்னுடைய இச்சையை தீர்த்துக்கொள்வதற்க்காக வேறொரு பெண்ணுடன் முறை தவறிய உறவில் இருப்பது வாடிக்கையாகிவிட்டது.
இதே போலத்தான் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் திருமணத்தை கடந்த உறவில் இருந்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனின் மனைவியை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து ஒரு கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற யசோதா நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ப்ரீத்தி(24). ப்ரீத்திக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புரங்கி வர்மா என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்று உள்ளது.
அதோடு இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக வர்மா தன்னுடைய மனைவி பிரீத்தியுடன் பெரும்பாலான நேரங்களில் இருப்பதில்லையாம். மனைவியுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் வர்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருமணத்தை கடந்து உறவிலும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் வர்மாவின் மனைவி பிரீத்திக்கு தெரிய வந்ததும் உடனடியாக ஜியாவை நேரில் சென்று கண்டித்துள்ளார். அதோடு தன்னுடைய கணவனை விட்டு போய்விடுமாறு தெரிவித்திருக்கிறார். இந்த வாக்குவாதத்தின் போது ப்ரீத்தி நான் உன்னை விட மிகவும் அழகாக இருக்கிறேன், அப்படி இருக்கும்போது என்னுடைய கணவர் எப்படித்தான் உன்னை எல்லாம் காதல் செய்கிறாரோ தெரியவில்லை என்று ஏளனமாக பேசியதாக சொல்லப்படுகிறது.
ப்ரீத்தியின் இந்த செயலால் ஆத்திரத்திற்கு உள்ளான ஜியா, ப்ரீத்தியை எப்படி பழி வாங்கலாம் என்று யோசித்தார். மேலும் தன்னைவிட அழகாக இருப்பதாக தெரிவித்த பிரீத்தியின் அழகை சிதைத்து விட வேண்டும் என்று ஒரு கொடூரமான என்னத்தை ஜியா வளர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜியா தன்னுடைய தோழி ஒருவருடன் ஒன்றிணைந்து ஒரு கொடூரமான திட்டத்தை திட்டி உள்ளார். ப்ரீத்தி முகத்தில் ஆசிட் வீச ஜியா திட்டமிட்டபோது இது தவறு என்று சொல்லி அவரை தடுத்து நிறுத்தாமல் அவருடைய தோழியும் இதற்கு உதவியாக இருந்திருக்கிறார்.
சென்ற ஞாயிறு அன்று புதிய கைபேசி எண்ணில் இருந்து ப்ரீத்தியை அழைத்துள்ளார் ஜியா. தங்களுடைய கணவரின் தகாத உறவு தொடர்பான ரகசியங்கள் எனக்கு தெரியும். நீங்கள் என்னை, கொண்டலால் குப்தா நகருக்கு வந்து சந்தியுங்கள். அத்துடன் பல ரகசியங்களை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும் என யாரோ ஒருவர் பேசுவதைப் போல பேசியுள்ளார் ஜியா. தன்னை தொலைபேசியில் அழைத்தது ஜியாதான் என்பதை அறியாத ப்ரீத்தியும் அவர் தெரிவித்ததை நம்பி அவர் வர சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.
அதோடு ப்ரீத்தி வீட்டில் யாரும் இல்லை என்ற காரணத்தால், தன்னுடைய 2 வயது மகனையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்திருக்கிறார் ப்ரீத்தி. அங்கே புர்கா உடை அணிந்து தன்னுடைய தோழியுடன் ஜியா, ப்ரீத்தியை பின்தொடர்ந்து வந்துள்ளார்.
அப்போது 2 வயது கைக்குழந்தை இருக்கிறது என்று கூட யோசிக்காமல் புர்கா உடையில் இருந்த ஜியா ப்ரீத்தியை வழிமறித்து ஆசிட்டை முகத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை ப்ரீத்தி கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில், அவர் மீது ஆசிட் பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த தாயும், குழந்தையும் வலியால் துடித்துள்ளனர்.
அவர்கள் வலியால் துடிப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக அங்கு திரண்டு இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாய், மகன் இருவரும் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜியாவை கைது செய்து இருக்கிறார்கள். அவரை காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு தோழியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.