கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை மற்றும் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை மற்றும் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06099) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக நாளை காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும். திருச்செந்தூரிலிருந்து நாளை இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06100) ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
சூரசம்ஹாரம் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 14-ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.