கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார் கிருத்திகா. 6 மாத காலமாக தன்னுடைய மாமா மகனை காதலித்து வந்துள்ளார். பெற்றோரிடம் மாமா மகனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் . இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் செய்து வைப்போம் என பெற்றோர்கள் கிருத்திகாவிடம் கூறிவிட்டனர்.
இதனால் பெற்றோர்களிடம் கடந்த ஆறு மாதமாக பேசாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் சிதம்பரத்தில் உள்ள கணினி மையத்திற்கு சென்று வீடு திரும்பிய கிருத்திகா தனது காதலனான மாமா மகனுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அவரிடம் தான் வீட்டிற்கு செல்லாமல் வல்லம்படுகை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை கேட்ட கிருத்திகாவின் மாமா மகன், பதட்டத்துடன் அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அங்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் கிருத்திகாவின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மாமா மகனை உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கிருத்திகா வலியுறுத்தி வந்ததாகவும் , படிப்பு முடிந்தவுடன் தான் திருமணம் செய்து வைக்கப்படும் என்று பெற்றோர்கள் கூறிய காரணத்தினால் விரக்தியில் கிருத்திகா இத்தகைய விபரீத முடிவை எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
சடலமாக இருந்த மகளை கண்ட பெற்றோர் கதறி துடித்தது, காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.