தருமபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2022-23-ம் ஆண்டிற்கான மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி இந்த மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய குறியீடு நிர்ணயம் செய்து 2100 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கால்நடையின் மதிப்பீட்டில் அதிக பட்சமாக ரூ.35,000 வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். ரூ.35,000 மதிப்பீட்டிற்கு மேல் உள்ள கால்நடைகளுக்கு கூடுதல் தொகைக்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு விவசாயி 5 எண்ணிக்கைக்குள் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய கன்று ஈன்ற பசு மாடு மற்றும் எருமைகளுக்கும், 1 முதல் 3 வயது உடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம். ஓராண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 1.45 சதவீதமும், மூன்றாண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 3.00 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்புத்துறை தருமபுரி அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்கள் தருமபுரி மற்றும் அரூர் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம்.