மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் சில தினங்களில் கோடைக்கால ஸீசன் தொடங்குவதை முன்னிட்டு அதன் முக்கிய சுற்றுலா மையங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமான ஊட்டி இந்த வெயில் காலத்தில் இதமாகயிருக்கும் ஒரு இடம். இங்கு சீசன் ஆரம்பம் ஆவதையொட்டி ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிய இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தமிழக சுற்றுலாத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தேயிலை தொழிற்சாலை ஆகியவற்றில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அதனை தவிர்க்க இந்த மூன்று மாதங்களுக்கும் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை அறிவித்துள்ளது.
இந்த மூன்று மாதங்களில் ஊட்டிக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் நிலையில் இதுபோன்ற சுற்றுலா பயணிகளின் படமெடுப்பு அப்பகுதியில் சுற்றுலாவை நம்பி வாழும் மக்களின் வருமானத்திற்கு ஒரு மிகப்பெரிய ஆதாரமாக அமையும்.