ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்து வைக்க அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைந்துள்ளது. ஜல்லிகட்டிற்கு தடை வந்த போது அவசர சட்டம் கொண்டு வந்து தடையை நீக்கியது அதிமுக அரசு. திமுக அங்கம் வகித்த மத்திய அரசு 2011-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்தது.
ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த ஏதுவாக ஜனவரி7, 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது. இந்த அறிவிக்கையினையும் உச்ச நீதிமன்றம் 12-01-2016 அன்று தடை செய்து தீர்ப்பளித்தது. திமுக அரசு அங்கம் வகித்த மத்திய அரசின் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக, தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக, மிகப் பெரிய அளவில் போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றதை அடுத்து, சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்கப்பட்டது. மேற்படி சட்டத்தை எதிர்த்து, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ’ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் இயற்றிய தமிழ்நாடு சட்டசபையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம்’, என்று தெரிவித்து.
இந்த வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முதலமைச்சர் இதில் உடனடியாக தனி கவனம் செலுத்தி, 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில், தலை சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.