திமுகவின் அடக்க முறைக்கு தமிழக பாஜக அஞ்சப் போவதில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமிபத்தில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்துடன் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பணிகள் நகராட்சி சார்பில் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் பாஜக மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போரட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகத்தில் நுழைந்து மேயர் அறையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பாஜகவினரை கைது செய்தனர்.
இந்த கைத்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்; வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி ஊழலைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் தமிழக பாஜக மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளைக் கைது செய்துள்ளது இந்த திறனற்ற அறிவாலய அரசு.
சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய அங்கமான வேலூர் சிப்பாய் கலகத்தை போல், ஊழலின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்க நேற்று தமிழக பாஜக வேலூரில் நடத்திய போராட்டம் விதையாக இருக்கும். அடக்குமுறைக்கு அஞ்சுபவர்கள் எங்கள் தொண்டர்கள் அல்ல என்பதை திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.