தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘உலக மகளிர் தின விழா’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் ‘பிங்க் ஆட்டோ’ சேவையை வழங்கவுள்ளனர். இவர்களுக்கு ஆட்டோக்கள் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் உள்ளிட்டவற்றை வழங்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல, மகளிர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் திருமணமான பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.