சேலம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது.
நடப்பு 2024-25-ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்ப்செட்டுகளுக்கான ரிமோட் மோட்டார் ஆபரேட்டர் (Remote Motor operator for pumpsets) பெற அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இம்மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை இணையவழி (RTGS / அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட NEFT) நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பம்ப்செட்டுகளுக்கான ரிமோட் மோட்டார் ஆபரேட்டர் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விவரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட வேளாண்மை பொறியியல் செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள சேலம், மேட்டூர். ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் செயல்படும் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வட்டார அளவில் உதவி வேளாண்மை பொறியியல் பொறியாளர் அல்லது இளநிலை வேளாண்மை பொறியியல் பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.