தமிழ்நாடு முழுவதும் 1,000 டீசல் பேருந்துகளை, சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.70 கோடி ஒதுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 8 லட்சம் கிலோ மீட்டர் குறைவாக இயக்கப்பட்ட பேருந்துகள் அல்லது 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளை சிஎன்ஜி-க்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயுக்கள் மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மாற்று எரிபொருள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் சேமிக்கப்பட்ட தொகை குறித்த தகவலை போக்குவரத்துத் துறை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதில், மாநகர பேருந்துகளை ஒரு லிட்டர் டீசல் மூலம் 4.76 கிமீ தூரம் இயக்க முடியும். அதன்படி ஒரு கி.மீ-க்கு ரூ.19.03 செலவாகும். இதுவே சிஎன்ஜி மூலம் 4.78 கிமீ-க்கு இயக்க முடிகிறது. இதற்கு ரூ.18.47 (ஒரு கி.மீ) செலவாகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 டீசல் பேருந்துகளை, சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.70 கோடி ஒதுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 8 லட்சம் கிலோ மீட்டர் குறைவாக இயக்கப்பட்ட பேருந்துகள் அல்லது 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளை சிஎன்ஜி-க்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.