படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 30.06.2025 உடன் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/- மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- வீதம் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம்வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/- மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000/-வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அரசு/தனியார் துறையில் இருந்து எவ்விதமான ஊதியம் பெறும் பணியில் இருந்தவர்கள்/இருப்பவர்கள் இந்த உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள். மேலும், தற்பொழுது எந்த துறையின் வாயிலாகவும் உதவித்தொகை பெற்றுக் கொண்டிருக்கக் கூடாது.
இந்த உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பதிவுதாரர்கள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 28.05.2025-க்குள் விண்ணப்பத்தினை தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள். 28.05.2025-க்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை அளித்து தொடர்ந்து உதவித் தொகை பெற்று பயன்பெறலாம்.