சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு மேல் அடுக்கு சுழற்சி காணப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று வட தமிழகத்தில் அநேக பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல நாளை வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே இன்று முதல் வரும் 23ம் தேதி வரையில் தமிழக மீனவர்கள் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய குமரிக்கடல் பகுதிகள் போன்ற இடங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வட தமிழக, தென் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று அதிகம் வீசப்படும் என்பதால் இந்த பகுதிகளுக்கும் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.