லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை; லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. இதை அரசியலாக பார்ப்பதைவிட, ஒரு நபர் லஞ்சம் வாங்க முற்பட்டு, லஞ்சம் வாங்கியுள்ளார். இதற்காக மொத்த அமலாக்கத்துறை மீதும் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறை மீது தவறு கிடையாது. மனிதர்கள் செய்யும் தவறுக்கு அமலாக்கத்துறை மீது தவறு சொல்ல முடியாது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.