4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றினால் இடைநின்ற பள்ளி மாணவர்களை கண்டறிவதற்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பினால் 5,33,447 மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 1,90,008 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். 3,26,779 மாணவர்கள் சேர்க்க தேவையில்லை என கண்டறியப்பட்டனர். 16,600 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என கண்டறியப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
2022-23 ம் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. கல்வியாண்டின் இறுதியில் கணக்கெடுப்பு நடத்தாமல், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா..? என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.