தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைபெறும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. மொபைல் எண்ணுக்கு வரும் ‘ஓடிபி’ உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் தர வேண்டாம்; அதன்மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் என்ற எச்சரிக்கையும் இணையம் மற்றும் வங்கிகள் வழியாக அறிவுறுத்தப்படுகிறது.
இணைய தள குற்றவாளிகள் இப்போது பொதுமக்களிடம் போலீஸ் அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று கூறி மோசடி செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். அதுவும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் போலியாக கைது செய்து அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து முழு பணத்தையும் அபகரித்துக்கொள்கின்றனர். இவ்வாறான, சைபர் மோசடிகளில் யாரும் சிக்க வேண்டாம், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், சைபர் கிரைம் குற்ற சம்பவங்கள் தொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத்துறை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதாவது, சைபர் கிரைம் விழிப்புணர்வு வாசகங்களை செல்போன் காலர் டியூனாக அமைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணின் காலர் டியூனாக, ‘சைபர் கிரைம்’ விழிப்புணர்வு வாசகங்களை நிறுவி உள்ளன. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடுத்த 3 மாதங்களுக்கு, நாள்தோறும் 8 முதல் 10 முறை ஒலிபரப்பாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாசகங்களுக்கு பிறகே, அழைப்புகள் செல்கின்றன.
Read more ; அச்சச்சோ.. தவெக பெண் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்..!! என்ன செய்ய போறாரு விஜய்..?