ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையான அமைச்சர் ஐ பெரியசாமியின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
கடந்த 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தனக்கும் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கூறி எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி ஜெயவேல் கடந்த மார்ச் மாதம் வழக்கில் போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கில் இருந்த அமைச்சரை விடுவித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையான அமைச்சர் ஐ.பெரியசாமியின் வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார்.
ஏற்கெனவே தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து மேல்முறையீடு செய்து, விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க போவதாக அறிவித்திருக்கிறார்.