ரஷ்யாவின் ஸ்புட்னிக் V, கொரோனா தடுப்பூசியை உருவாக்க உதவிய ஒரு முக்கிய விஞ்ஞானி, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் கணிதத்திற்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர் ஆண்ட்ரே போடிகோவ்.. இவர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V, கொரோனா தடுப்பூசியை உருவாக்க உதவிய ஒரு முக்கிய விஞ்ஞானி ஆவார்.. இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள தனது குடியிருப்பில் ஆண்ட்ரே போடிகோவ் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கழுத்தை நெரித்த அடையாளங்களுடன், கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் அவரது உடலில் காணப்பட்டன என்று கூறப்படுகிறது.. அவரது மரணம் ஒரு கொலையா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரஷ்ய விசாரணை குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விசாரணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மார்ச் 2, 2023 அன்று, மாஸ்கோவில் உள்ள ரோகோவா தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில், 29 வயது இளைஞர் ஒருவருக்கும், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 47 வயது உரிமையாளரான ஆண்ட்ரே போடிகோவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.. இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அந்த இளைஞர், பெல்ட்டால் கழுத்தை நெரித்தார். மற்றும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆண்ட்ரே போடிகோவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று ரஷ்ய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.. கொலை செய்யப்பட்ட விஞ்ஞானிக்கும் குற்றவாளிக்கும் இடையே பணம் தொடர்பான தகராறு இருந்ததாகவும், இதன் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன..
2020 ஆம் ஆண்டில் ஸ்புட்னிக் V தடுப்பூசியை உருவாக்கிய 18 விஞ்ஞானிகளில் ஆண்ட்ரே போடிகோவும் ஒருவர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த 2021ல் கோவிட் தடுப்பூசியை உருவாக்குவதில் அவர் செய்த பணிக்காக Fatherland award என்ற விருதை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..