fbpx

மத்திய அரசுக்கு கடிதம் என்ற பெயரில் திமுக அரசு போடும் நாடகம்…! அம்பலப்படுத்திய அண்ணாமலை…!

மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; டெல்டா மாவட்டங்களில், மழையினாலும், பனிப்பொழிவினாலும், அறுவடையான நெல்லில் ஈரப்பதம் அதிகரித்திருக்கிறது. இதனால், வழக்கமான 17% ஈரப்பதம் கொண்ட நெல்லை மட்டும் கொள்முதல் செய்யாமல், 22% ஈரப்பதம் உடைய நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாஜக சார்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, 22% ஈரப்பதம் உடைய நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்றுத் தந்திருந்தோம். விவசாயிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, பாஜக தொடர்ந்து துணையிருக்கும். ஆனால், திமுக அரசு செய்து கொண்டிருப்பதென்ன? தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகளைக் காக்க வைத்து, அதன் பின்னர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், சம்பா பயிர் அறுவடைக் காலத்தில், பருவமழை பெய்வதால், நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் தீர்வு காணக் கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்டில், 50% மானியத்தில், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த திமுக அரசு, அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் வரை அது குறித்துப் பேசவே இல்லை. நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க 50% மானியம் மட்டும் கொடுத்தால், மீதமுள்ள நிதிக்கு, சிறு குறு விவசாயிகள் எங்கே செல்வார்கள்?

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும், தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டொன்றுக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் விவசாயிகளுக்கு இத்தனை ஆண்டுகளாக நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கித் தரவில்லை? நான்கு இரும்புக் கம்பிகளை நட்டு, மேலே ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரையை வைத்து, நிழற்குடை என்ற பெயரில் 10 லட்சம், 20 லட்சம் என்று கணக்குக் காட்டிக் கொள்ளையடிக்கும் பணத்தில், ஆண்டுக்கு 10 நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வாங்கி கொடுக்கலாமே. தொகுதி மேம்பாடு என்பது, தங்கள் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா டெல்டா மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்?

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இந்த ஈரப்பத பிரச்சினை, இந்த ஆண்டே இறுதியாக இருக்கட்டும். டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தொகுதி மேம்பாட்டு நிதியில், நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்கி, விவசாயிகள் இலவசப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை வேண்டும் என்றும், திமுக அரசு தனது வழக்கமான நாடகத்தை நிறுத்தி விட்டு, இதனை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

English Summary

The drama being played by the DMK government in the name of a letter to the Central Government

Vignesh

Next Post

உங்க ஆயுசு நாட்கள் அதிகரிக்க வேண்டுமா? அப்போ அடிக்கடி இட்லி, தோசை சாப்பிட வேண்டாம், இதை சாப்பிடுங்க..

Tue Jan 21 , 2025
avoid eating idly and dosa often as breakfast

You May Like