நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது..
கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது..
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, H3N2 வைரஸ் காய்ச்சல் குறித்து பேசி உள்ளார்.. பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், வயதானவர்கள் மற்றும் அடிப்படை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல்வலி மற்றும் மூக்கில் சளி ஆகியவற்றுடன் இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.. H3N2 வைரஸ் உருமாறியதாலும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாலும் கொரோனா போல இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ பல ஆண்டுகளுக்கு முன்பு H1N1 வைரஸ் காரணமாக ஒரு தொற்றுநோய் ஏற்பட்டது. அந்த வைரஸ் தற்போது H1N2 ஆக உருமாறி உள்ளது, எனவே, இது ஒரு சாதாரண இன்ஃப்ளூயன்ஸா திரிபு தான். ஆனால் வைரஸ் சிறிது சிறிதாக மாற்றமடைவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதில் காய்ச்சல் ஏற்படுகிறது..
ஆண்டின் இந்த நேரத்தில் வானிலை மாறும்போது காய்ச்சல் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.. கொரோனாவுக்கு பிறகு மக்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.. இதுபோன்ற காரணங்களால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. எனவே நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவதே வைரஸை தடுப்பதற்கான வழி.. நாம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.. சமூக இடைவெளியை பின்பற்ற.. ஆனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீண்டகால சுவாச நோய்கள், இதயப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள் அல்லது டயாலிசிஸ் செய்துகொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..