புதுவையில் போஸ்டர், பேனர் ஒட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகியை வீடு புகுந்து தவெகவினர் தாக்கிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் உள்ள பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 47). இவரது முத்த மகன் சிவப்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் மாணவர் பிரிவில் பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பிறந்தநாளையொட்டி வாழ்த்து பேனர் வைத்து இருக்கிறார்.
அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் அந்த பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தாயார் கேட்டதற்கு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இரு தரப்பையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் பேனர் கிழித்ததற்கு முரளி மன்னிப்பு கேட்டதால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் சமாதானமாக சென்றதாக கூறப்படுகிறது.
தனது ஆதரவாளரை காவல் நிலையம் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததால் ஆத்திரம் அடைந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அருள்பாண்டி உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல், திடீரென வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த சிவபெருமாள், அவரது மனைவி வானதியை அந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த சிவபெருமாள், மனைவி வானதி, மகன்கள் சிவப்பிரகாஷ், சூரிய பிரகாஷ் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த மோதல் குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 9 பேரையும் தேடி வருகிறார்கள். பேனர் வைக்கும் தகராறில் தவெக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; ராமதாஸ் குறித்த அவதூறு பேச்சு.. முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்..!! – கொந்தளித்த அன்புமணி