ஆனந்தவிகடன் இணையதளம் முடக்கப்பட்டு இருந்த நிலையில், முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூர் ஆனந்த விகடனின் வெளியிடப்பட்டது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது..
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே நிலையில் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை நீக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனந்த விகடன் சார்பில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விகடன் இணையதளத்தை முடக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரில், பிப்ரவரி 15 ந்தேதி ஒன்றிய அரசு, விகடன் இணையதளத்தை முடக்கியது குறிப்பிடத்தக்கது.