‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நூலை விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனமும் விகடன் பிரசுரமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் திருமாவளவன் இந்த விழாவை புறக்கணித்த நிலையில், விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்று மாலை அரங்கத்திற்கு வந்த விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். மேலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை விஜய் வெளியிட முதல் பிரதியை அம்பேத்கர் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டூம்டே பெற்றுக் கொண்டார்.
2-வது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். 3-வது பிரதியை ஆதவ் அர்ஜுனாவும், 4-வது பிரதியை விகடன் குழும தலைவர் சீனிவாசனும் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுக அரசை மறைமுகமாக விமர்சித்திருந்தார். அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் மன்னராட்சியை அம்பேத்கரின் கொள்கைகள் உடைக்கும். 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் முதலமைச்சராக ஒருவர் உருவாக்கப்பட கூடாது. தமிழகத்தை கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும்.
நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்றாலும் அவரின் மனசாட்சி இங்கு தான் இருக்கிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியவர் அம்பேத்கர் தான். கால சூழ்நிலைகள் பட்டியலின மக்களின் விலங்குகளை உடைக்கும் நேரம் வரும். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு இடமில்லை. தமிழகத்தில் மதம், சாதியை சேர்த்து ஊழலையும் ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
Read More : சமத்துவத்திற்காக உழைத்த மகத்தான தலைவர்.. அம்பேத்கர் பற்றிய அறியாத பக்கங்கள் ஒரு பார்வை..!!