திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்,குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
அத்துடன், முதல்வர் தரப்பிலும் இதற்கு கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை, விசாரிப்பதற்கு தனி படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் தான், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமாரை, காவல்துறையினர் சுட்டு பிடித்தனர். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள கள்ளக்கிணறு பகுதியில், செந்தில்குமார் என்ற நபர் வசித்து வந்தார். இவரிடம் வெங்கடேசன் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.குடியிருப்பு பகுதியில், வெங்கடேசன் மது குடித்துள்ளார், அதை செந்தில்குமாரின் உறவினரும், பாஜகவின் பிரமுகருமான மோகன்ராஜ் என்பவர், உள்ளிட்ட நபர்கள் தட்டி கேட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தான், செந்தில்குமார் அவருடைய உறவினர்கள் மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் உள்ளிட்ட நால்வரும் மூன்று பேர் கொண்ட கும்பலால், கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து, தனிப்படை அமைத்து, விசாரித்து வந்த காவல்துறையினர், திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த செல்லமுத்து (24), சோணை முத்தையா உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் என்பவரை, திருச்சி முக்கொம்பு அருகே, தனிப்படை காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் கிடைத்தது. திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில், அவர் சரணடைந்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழ்நிலையில் தான், இந்த கொலை சம்பவம் நடந்த கள்ளக்கிணறு, தொட்டம்பட்டி அருகே ராஜ்குமார் பதுங்கி உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற காவல் துறையினர், அவரை கைது செய்ய முயற்சி செய்தனர்.
ஆனால், அந்த நபர் காவல் துறையினரின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததால், அவர் மீது காவல்துறையினர் தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், கால்களில் காயம் ஏற்பட்ட ராஜ்குமார், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு நடுவே, ராஜ்குமார் அவருடைய சகோதரரின் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, வெங்கடேஷ் என்று பெயரை மாற்றி அந்த பகுதியில் பணிபுரிந்து வந்ததாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.