2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று முடிந்துள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவர் பேசியதாவது : பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்ன ஆனது? ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டது. டீசல் விலை குறைக்கப்படவில்லை.
மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ரேஷனில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?. நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் , கல்வி கடன் ரத்து குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்துவதாக தெரிவித்தார்கள் இடம் பெறவில்லை. நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதாக தெரிவித்திருந்தனர், இடம்பெறவில்லை
சமையல் எரிவாயு மானியம் வழங்குவதாக தெரிவித்தனர், அதுவும் இடம்பெறவில்லை. புதிய பேருந்துகள் வாங்க ரூ.3,000 கோடி என்பது வெற்று அறிவிப்பு. அரசு பணியிடங்களை நிரப்புவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 50,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன; ஓராண்டில் 40,000 இடங்களை நிரப்ப முடியுமா?. விளம்பரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.
2026 தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை;.நடைமுறையில் பல திட்டங்களுக்கே கடன் வாங்கித்தான் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. நிர்வாகத் திறமையற்ற அரசு நடக்கிறது என்பதே எதார்த்த உண்மை. அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் நிலையில் எப்படி புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள்?. பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது; இது ஒரு விளம்பர பட்ஜெட். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பட்ஜெட் தாக்கல் நடப்பதற்கு முன்பு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “கடந்த ஒரு வார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
அமலாக்கத்துறை சோதனை அடிப்படையில் ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்தார்.