மகா கும்பமேளா குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தவர்களை பீகார் ஒருபோதும் மன்னிக்காது என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில் நேற்று விடுவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பல வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். புனித மகா கும்பமேளா காலத்தில் மந்தராச்சல் மண்ணில் காலடி வைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த இடம் ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதோடு வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சாத்தியக் கூறுகளையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இது தியாகி தில்கா மஞ்சியின் பூமி என்றும், புகழ்பெற்ற பட்டு நகரம். பாபா அஜ்கைபிநாத்தின் புனித பூமியில் வரவிருக்கும் மகா சிவராத்திரிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற ஒரு புனிதமான தருணத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை வெளியிடுவது தமக்கு அதிர்ஷ்டம் என்றும், நேரடி பணப் பரிமாற்றம் மூலம் சுமார் 22,000 கோடி ரூபாய் அளவிற்கு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையின் பயனாளிகளாக பீகாரைச் சேர்ந்த சுமார் 75 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பீகார் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.1,600 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. பீகார் மற்றும் நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவின் பெருமைமிகு பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் தங்கள் அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார். இந்தியாவின் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் மிகப்பெரிய பண்டிகையான பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நடைபெற்று வருவதை அவர் எடுத்துரைத்தார். ஒற்றுமையின் மகா கும்பமேளாவில் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் நீராடியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பீகார் முழுவதிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மகா கும்பமேளா குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த கட்சிகளை அவர் விமர்சித்தார். ராமர் கோயிலை எதிர்த்த அதே நபர்கள் இப்போது மகா கும்பமேளாவை விமர்சிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். மகா கும்பமேளாவை அவமதிப்பவர்களை பீகார் ஒருபோதும் மன்னிக்காது என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பீகாரை வளத்திற்கான புதிய பாதையில் இட்டுச் செல்ல அரசு தொடர்ந்து அயராது பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.