1,2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழகத்தில் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், அதிக எண்ணிக்கையிலான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மூலம் குழந்தைகளை அதிக எடை கொண்ட புத்தகப் பைகள் சுமப்பதை தவிர்க்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் மீண்டும் நீதிமன்றம் 1 மற்றும் 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் தருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றி பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்து, ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா..? இல்லையா..? என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.