கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ் (61), ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிறிஸ்துதாசின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், 3-வது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கிறிஸ்துதாஸ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகள் ஜான்சி, மருமகன் பாக்யராஜ் ஆகியோர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் மகளும், மருமகனும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசாருக்கு கிறிஸ்துதாசின் மருமகன் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது மாமனாரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். மேலும், கேரளாவில் பணிபுரிந்து வரும் நான், எனது மாமனார் உடன் மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது எனது மாமனார் கியாஸ் சிலிண்டருக்கு ஆயிரம் பணம் கேட்டார்.
நான் பணம் இல்லையென கூறியும் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்தேன். இதையடுத்து, அருகிலிருந்த கோடாரியால் அவரை தலையில் தாக்கினேன். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த கோடாரியை பக்கத்தில் உள்ள கிணற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது மனைவியுடன் சேர்ந்து மாமனார் மயங்கி விட்டதாக கூறி நாடகமாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் மருமகன் பாக்யராஜை கைது செய்து, கிணற்றில் வீசிய கோடாரியை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.