சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணையத்தயாராக இருந்ததாகவும், ஆனால் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் பேசியிருந்தார்.இந்த பேச்சு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்து, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.முக செய்திதொடர்பாளர் பாபுமுருகவேல் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இதற்கிடையே வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அப்பாவு மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.முக செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு ஒன்றும் இல்லை என கூறி அப்பாவு-க்கு எதிரான வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதை அடுத்து அதிமுக வழக்கை வாபஸ் பெற்றது. வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
Read more ; நெருங்கும் தேர்தல்.. அரசியலில் இருந்து ஒய்வை அறிவித்த டெல்லி சபாநாயகர்..!!