செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணம் வாங்கிக் கொண்டு வேலை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறை வழக்கில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீனில் விடுதலை ஆன செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் மீண்டும் அவர் அமைச்சராக பதவி ஏற்றார். முன்பு அவர் வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையே அவருக்கு ஒதுக்கப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன்பெற்ற செந்தில் பாலாஜி, தற்போதுஅமைச்சராக பதவியில் உள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா, ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றதால் அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Read more : முதலிரவில், மணமகள் கேட்ட காரியம்; அலறியடித்து ஓடி, விவாகரத்து கேட்ட மணமகன்..