கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப் படி மாற்றம் தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநரின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு, அரசுக்கு கைத்தறி இயக்குநர் வேண்டுகோள் விடுத்தார். இதை பரிசீலித்த அரசு, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த முடிவு செய்தது. இதையடுத்து, ஊதியம், வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப்படி ஆகியவை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம், விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதாவது அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய நிலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கு நிகராக வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப் படியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2023 ஜூலை 1-ம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.