சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுறிக்கையில், விபத்து வழக்குகளின் போது ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.
லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று காயமடைந்த ரமேஷ் என்பவர் இழப்பீடு கோரி இருந்தார். ஆனால், விபத்து நடந்தபோது ரமேஷ் மீது மது வாசனை வீசியதால், 50% இழப்பீடு மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டது. அதனை எதிர்த்து ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மது வாசனை வீசியதாக கூறிய போதிலும், அதன் அளவை குறிப்பிடவில்லை. ஓட்டுநரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியிருந்தால் மட்டுமே கவனக்குறைவாக இருக்க முடியும்.” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
மேலும், பல சமயங்களில் வாகன விபத்துகளில் சிக்கி மருத்துவமனை அழைத்து வரப்படும் நபர்களுக்கு இரத்தத்தில் ஆல்கஹால் அளவை மருத்துவர்கள் பரிசோதிக்கத் தவறுவதாகத் தெரிவித்த நீதிபதி, இதனால் விபத்தில் காயமடைபவர்களுக்கு உரிய இழப்பீட்டை தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது எனத் தெரிவித்தார்.
எனவே, மோட்டார் வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனை அழைத்து வரப்படும் நபர்கள் மீது மதுவாசம் வீசினால், அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவைப் பரிசோதிக்கவும், அதனை விபத்து அறிக்கைகளில் பதிவு செய்யவும் தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கையை வெளியிடுமாறு சுகாதாரத் துறை செயலாளருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
Read more ; பயங்கரம்!. தேவாலயங்கள், காவல் நிலையங்கள் மீது துப்பாக்கிச்சூடு!. 15 பேர் பலி!