fbpx

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 தமிழக அரசு வழங்க வேண்டும்…!

நெல் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், நெல் கொள்முதல் அளவு 34.96 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. இது கடந்த 2022-23ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவான 44.22 லட்சம் டன்னை விட 9.26 லட்சம் டன், அதாவது 21% குறைவு ஆகும். தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் அளவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவது கவலை அளிக்கிறது. 2022-23ஆம் ஆண்டில் 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 44.22 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 76% மட்டுமே. அந்த ஆண்டில் 120 லட்சம் டன் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அதில் 36.85% அளவுக்கு மட்டுமே நெல் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால், அதையும் விட 2023-24 ஆம் ஆண்டில் நெல் கொள்முதல் குறைந்திருக்கிறது. காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது, சம்பா – தாளடி பயிர்களின் சாகுபடி பரப்பு குறைந்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டி கொள்முதல் அளவு குறைந்ததை நியாயப்படுத்த முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் 2023-24ஆம் ஆண்டில் நெல் கொள்முதலுக்கான இலக்கு 50 லட்சம் டன்னாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைக் கூட எட்ட முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 69.92% மட்டும் தான் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டில் எட்டப்பட்ட கொள்முதல் அளவான 76 விழுக்காட்டை விட மிகவும் குறைவு ஆகும்.

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன? என்பது கண்டறியப்பட்டு, அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அண்மைக்காலமாகவே நெல் சாகுபடி லாபமான ஒன்றாக இல்லாததால் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குவிண்டால் நெல்லில் இருந்து 68 கிலோ அரிசி உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால் ஒரு கிலோ சன்னரக அரிசி உற்பத்தி செய்யத் தேவைப்படும் 1.47 கிலோ நெல் தேவை. அதன்படி பார்த்தால் ஒரு கிலோ சன்னரக நெல்லின் மதிப்பு ரூ.53 ஆகும். அரிசிக்கான உற்பத்திச் செலவு, சந்தை லாபம் ஆகியவற்றுக்காக மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கி விட்டாலும் கூட ஒரு கிலோ நெல்லுக்கு ரூ 35.33 வீதம் குவிண்டாலுக்கு ரூ.3533 வழங்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ. 2310 மட்டுமே வழங்கப்பட்டது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். ஆனால், நேற்று முதல் தொடங்கியுள்ள கொள்முதல் பருவத்தில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையான 2320 ரூபாயுடன் ரூ.130 ஊக்கத்தொகை சேர்த்து ரூ.2450 மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. எனவே, உழவர்கள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

English Summary

The Tamil Nadu government should provide Rs.3,000 per quintal of paddy

Vignesh

Next Post

Rain Alert..! 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை...!

Tue Sep 3 , 2024
Strong winds at a speed of 55 kmph... Fishermen warned to go to sea..
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like