சென்னை மாநகரில் கூடுதலாக மகளிர் பிங்க் நிற பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகரப் போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 3,376 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள் ஒன்றுக்கு சுமார் 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். தற்போது சாதாரண பிங் சிட்டி பேருந்துகள், சாதாரண நகரப் பேருந்துகள், மினி பேருந்துகள், டீலக்ஸ் நகரப் பேருந்துகள், டீலக்ஸ் நகர ஏசி பேருந்துகள் எனப் பல்வேறு விதமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம் என திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்தது. இதன்படி மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் தெரிந்துகொள்ள ஏதுவாக பேருந்து முன்பும், பின்பும் பிங்க் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளுக்கும் பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது சென்னை மாநகரில் கூடுதலாக மகளிர் பிங்க் நிற பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.