விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அல்லிக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாகலட்சுமி (25). இவரது கணவன் பீமராஜ். இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. நாகலட்சுமி தன்னுடைய சொந்த கிராமமான அல்லிக்குளத்திலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நாகலட்சுமியின் உறவினர் ராஜபாண்டியன் (26) என்பவரிடம் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார்.
இருவரும் போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கணவர் பீமராஜ், மனைவியை கண்டித்துள்ளார். இதனால், ராஜபாண்டியனுடன் பேசுவதை நாகலட்சுமி நிறுத்திக் கொண்டார். இது ராஜபாண்டியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாகலட்சுமியிடம் தகராறு செய்து வந்ததுடன், முன்புபோல் தன்னிடம் பழகுமாறும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றைய தினம், உறவினர் பிரியதர்ஷினியை (20) அழைத்துக் கொண்டு காரியாபட்டியில் உள்ள ஒரு வங்கிக்கு தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வந்துள்ளார் நாகலட்சுமி.
அப்போது ராஜபாண்டியனும் அதே வங்கிக்கு பைக்கில் வந்துள்ளார். பேங்கில் வேலை முடிந்ததுமே, நாகலட்சுமி, குழந்தை சம்பிரீத் ராஜ், பிரியதர்ஷினி ஆகிய 3 பேரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு ராஜபாண்டியன் சென்றுள்ளார். எஸ்.கல்லுப்பட்டி விலக்கு அருகே சென்றபோது பிரியதர்ஷினியையும், குழந்தையையும் கீழே இறக்கிவிட்டு, நாகலட்சுமியை மட்டும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ராஜபாண்டியன் மட்டும் பைக்கில் திரும்பி வந்துள்ளார்.
அப்போது அவரிடம் நாகலட்சுமி எங்கே? என்று பிரியதர்ஷினி கேட்டதற்கு, நாகலட்சுமி காட்டுக்குள்ளே இறந்து கிடக்கிறார் என்று சொல்லிவிட்டு பைக்கில் வேகமாக பறந்துவிட்டார் ராஜபாண்டியன். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி, காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, நாகலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி போலீசார், நாகலட்சுமியின் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தப்பியோடிய ராஜபாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.