தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 22-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று தேனி மாவட்டம் சோத்துப்பாறை, கோவை மாவட்டம் வால்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனிக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில் ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.