தனியார் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு சட்டம் போல் விதிகளை உருவாக்கிட வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 17-ம் தேதி பள்ளிக்குள் சில சமூக விரோத கும்பல் அத்துமீறி நுழைந்து, காவல் துறை வாகனங்களை தீ வைத்து கொளுத்தியும் பள்ளியின் உடைமைகளை கட்டடம் தவிர மற்ற அனைத்து உடைமைகளையும் கடுமையாக சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். பின்னர் தனியார் பள்ளி சங்கத்தின் சார்பில் பள்ளிகளை மூடப்பாவதாக அறிவித்தனர். நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவித்தனர்.
இது குறித்து மீண்டும் அனைத்து சங்க நிர்வாகிகள் சென்னையில் ஒன்றுகூடி பள்ளிகளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் வருங்காலத்தில் எந்த கல்வி நிறுவனத்திலும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு விதிகளை உருவாக்கி பள்ளிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வெளியிடப்பட்ட அரசாணை எண் 3 /2008-ன்படி தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.