மத்தியப் பிரதேசத்தில் மாதவிடாய் காலத்தில் மாமியாரின் மூடநம்பிக்கை விதிமுறைகளால் மனவேதனையடைந்த பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் பாதிரியார். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், மனைவி மற்றும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், பாதிரியாரின் தாயார் காலாவதியான பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் கொண்டிருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மருமகள், கணவரின் பரஸ்பர சம்மதத்தின்பேரில் விவாகரத்து கோரி போபால் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13(B) இன் கீழ் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மாமியார் வீட்டில் முதல் மாதவிடாய் காலத்தில், ஏழு நாட்களுக்கு சமையலறையிலோ அல்லது பூஜை அறையிலோ நுழைய வேண்டாம் என்று கூறுவதாகவும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், தன்னை ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும், ஒரு வாரத்திற்கு குளிக்கக் கூடாது என்று பல்வேறு விதிமுறைகளை அவரது மாமியார் போட்டுள்ளார்.
இதனை கணவரிடம் கூறினாலும், அவர் தலையிட மறுத்து, விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், நான் வெளியே செல்லும் போதெல்லாம் தெரு நாய்கள் தன்னைப் பார்த்து குரைத்து துரத்துவதாகவும், என்னிடம் தீய சக்திகள் இருப்பதைக் குறிக்கிறது என்றும் மாமியார் கூறிவருவதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த துன்புறுத்தல்களை தாங்கமுடியாமல், திருமணமான நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார். இதனை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற காலாவதியான நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை என்று குறிப்பிட்டு, இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.