விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 288 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியது. மாநிலங்களவை வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதவுக்கு எதிராக விசிக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி காணொளி வாயிலாக கட்சி நிர்வாகிகளிடம், பேசிய அவர்; பாஜகவை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகள், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பங்கேற்க வேண்டும். இது கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஆர்ப்பாட்டம் அல்ல. நாட்டு மக்களை ஒருங்கிணைத்து நடத்துகிற போராட்டமாகும்.
எனவே, விமர்சனம் என்ற பெயரில் மற்ற மதங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பக் கூடாது. எல்லா மதங்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். மதத்தின் மீதான, மதம் போதிக்கிற கருத்துகள் மீதான பார்வை வேறுபடலாம். விமர்சனங்கள் இருக்கலாம். முரண்பாடு இருக்கலாம். ஆனால், இஸ்லாமிய மதத்தின் வாழ்வாதாரத்துக்கு குரல் கொடுக்கிற சூழலில், இந்து மதத்தை சார்ந்தவர்கள் சங்கடப்படும் வகையில் எந்த கருத்துகளையும் பேசக்கூடாது. இந்து சமூகத்தை சேர்ந்தவர்களை காயப்படுத்தக் கூடாது. அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதில் மட்டும் உறுதியாக இருப்போம்.
அதேநேரம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களை விமர்சனம் என்ற பெயரால், அவமதிக்கும் வகையில் பேசிவிடக் கூடாது. தனிநபர்களாக முரண்பாடு இருந்தாலும், அவர்களின் பதவி பொதுவானது. தனிநபராக அவர்களை விமர்சிக்க உரிமை உள்ளது என்றார்.