முஸ்லீம் பெண்கள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் குலா சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முஸ்லீம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் தலாக் நடைமுறையை போல, மனைவிகள் கணவரை விவாகரத்து செய்யும் வகையில் குலா நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையின்படி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷரியத் கவுன்சிலில் மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்யக்கோரி 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சிவராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஷரியத் கவுன்சிலுக்கு, அத்தகைய சான்றிதழ்களை வழங்க அதிகாரம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, குலா நடைமுறையின்படி விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சில உறுப்பினர்களைக் கொண்ட ஷரியத் கவுன்சில் போன்ற தனியார் அமைப்புகளை அணுகக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தனியார் அமைப்புகள் வழங்கும் குலா சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது எனவும், பிரிந்த தம்பதிகள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க குடும்ப நல நீதிமன்றம் அல்லது தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.