தனித்துவமான அடையாள எண் பெறாவிட்டால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாயிலாக விவசாயிகளின் நில உடைமைகளை பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல்களுடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 46,736 விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் அடையாள எண் பெற்றுள்ளனர். விவசாயிகள் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் இதில் ஏற்படும் காலதாமதத்தினை களையும் வகையில் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட வேளாண் அடுக்குத் திட்டம் (Agristack) செயல்படுத்தப்பட்டு விவசாயிகளுக்குத் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மீதமுள்ள விவசாயிகள் உடனடியாக பதிவு செய்திட வேண்டும்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களை விட்டு வேறு எந்த பகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் தங்களது நில உடைமைகளை இலவசமாக பதிவு செய்து தனித்துவமான அடையாள எண் பெற்று பயனடையலாம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டம், பிரதம மந்திரி காப்பீடு திட்டம் போன்ற அரசின் திட்டங்களில் பயனடைய விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் அவசியம் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளில் 26,877 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள 40,732 விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
2025-26 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெறவும் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யவும் விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் அவசியமாக உள்ளது. தனித்துவமான அடையாள எண் பெறாவிட்டால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000/- வழங்கும் திட்டமான பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டத்தில் அடுத்த தவணை நிறுத்தம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.