தமிழகத்தை பொறுத்தவரை, அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளும் மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக,சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களுக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது, இதில் 547 ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவு எண் கொண்டவை.
இந்த வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வந்தது.
அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில், இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. ஆனால் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற அரசு தரப்பில் கொடுத்த காலம் கடந்த நிலையில் 14ம் தேதி முதல் தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் மாநிலத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அறிவித்தது. இந்நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர்.
இதனைத் தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை வரும் 17ம் தேதி வரை இயக்க அவகாசம் அளித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்குவதற்கான கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வார விடுமுறை, பக்ரீத் பண்டிகையையொட்டி வெளிமாநில பேருந்துகளை இயக்குவதற்கான அவகாசம் நீட்டிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திங்கட்கிழமைக்கு பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கினால் போக்குவரத்து துறையினுடைய விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More: போக்சோ வழக்கில் சிக்கிய எடியூரப்பா! வாரண்ட் பிறப்பித்தது கோர்ட்! எந்த நேரத்திலும் கைது!!