இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சிலர் தங்களுக்கே தெரியாமல் மோசடியில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு மோசடி சம்பவம் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் அரங்கேறியுள்ளது. சிட்டி பேங்கின் ஊழியர் எனக் கூறிக்கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர், உங்கள் கிரெடிட் கார்டு ஒப்புதல் நிலுவையில் இருப்பதாகவும், உடனே புதிய சிம் கார்டை வாங்குமாறும் அந்த மர்ம நபர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, சில நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மொபைல் போன் பார்சல் வந்துள்ளது. பின்னர், அந்த ஃபோனில் புதிய சிம் கார்டை போட்டு, வழக்கம்போல் பயன்படுத்தி வந்துள்ளார்.
அந்த மொபைல் போனில் ஏற்கனவே பல செயலிகள் டவுன்லோட் செய்யப்பட்டிருந்தது. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு கிடைத்த OTP தகவல்கள் அனைத்தும் மோசடி கும்பலுக்கும் அனுப்பப்பட்டது. இதைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.8 கோடியை அந்த கும்பல் திருடியுள்ளது. முன்னதாக வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலியை வைத்து மோசடி சம்பவம் அரங்கேறி வந்த நிலையில், தற்போது புதிய ஃபோன்களை கொடுத்து, சிம் கார்டு போட்டு பயன்படுத்தி வந்ததும் அவர்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் அப்ளிகேஷன்கள் மூலம் நமது அனைத்து தகவல்களையும் திருடி பணத்தை பறிக்கின்றனர்.
தற்போது ரூ.2.8 கோடியை இழந்தவர் ஒயிட்ஃபீல்டு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதனடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால், அதை தவிர்க்குமாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Read More : சர்ச்சையில் சிக்கிய ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்..!! தேர்தல் ஆணையம் உத்தரவு..!!