fbpx

‘கை, கால்களை இழந்தவர்கள் காப்பாற்றும்படி கதறினார்கள்’ – உயிர்தப்பிய பயணியின் அதிர்ச்சி பேட்டி!

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஓடிசாவில் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 230-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த ரமேஷ் வேல்ராஜ் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்தார். அதில் அவர் விபத்தின்போது என்ன நடந்தது என்பது குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், ”நாங்கள் தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். நான் பயணம் செய்தது ரயிலின் கடைசியில் உள்ள கோச். ரயிலின் கடைசியில் இருந்த நான்கு பெட்டிகளில் பயணம் செய்த மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ரயிலின் முன்புற பெட்டிகளில் பயணம் செய்த மக்கள்தான் விபத்தில் சிக்கிவிட்டனர்.

மாலை 7 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. நாங்கள் ஏசி பெட்டியில் இருந்தபோதும் விபத்தின்போது பயங்கர சத்தம் ஏற்பட்டது. ஒயர்கள் அறுந்து விழுந்தன. ரயில் குலுங்கி தரம்புரண்டு விட்டது. நாங்கள் கீழே இறங்கி பார்த்தபோதுதான் ரயில் விபத்தில் சிக்கியிப்பதை உணர்ந்தோம். பயணிகள் ஆங்காங்கே விழுந்து கிடைத்தனர். நிறைய பேர் வேதனையில் கதறி துடித்தார்கள்.

அடிபட்டவர்களை ஒரு ஓரமாக போட்டிருந்தனர்.கை, கால்களை இழந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி கதறி அழுதார்கள். 7.30 மணிக்கு ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் வந்தது. முதலில் 3 ஆம்புலன்ஸ் வந்தது. இரவு 8 மணிக்கு 25 ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் தவிர கிடைக்கிற வாகனங்களில் எல்லாம் அடிபட்டவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருகில் உள்ள கிராமத்து மக்கள் உதவுவதற்காக வந்தனர்.

நாங்கள் 8.30 மணியளவில் விபத்து நடந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டோம். அருகில் உள்ள பை-பாஸ் ரோட்டில் இருந்து பஸ் பிடித்து புவனேஸ்வருக்கு சென்றுவிட்டோம். 60 முதல் 70 பேர் நாங்களாகவே புவனேஸ்வருக்கு வந்துவிட்டோம். அங்கிருந்து நிறைபேர் மாறிமாறி பஸ் பிடித்து சென்னைக்கு சென்றுவிட்டனர். புவனேஸ்வருக்கு சுமார் 150 சென்றோம். 3 பேருந்துகளில் சென்றோம். ஒரே பேருந்தில் 50 முதல் 60 பேர் வரை பஸ் ஏறினோம். விபத்து நடந்த இடத்திலிருந்து புவனேஸ்வர் செல்வதற்கு 4 மணி நேரம் ஆனது. எங்களுடைய சொந்த செலவில், நாங்களாகவே பஸ் பிடித்து சென்றோம். இப்போது எல்லோருமே சென்னை சென்றுவிட்டனர். இங்கு இப்போது நான் மட்டுமே தனியாக இருக்கிறேன். விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

இரவில் எங்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்வார்களா என்பது குறித்து எதுவும் தெரியாததால் அங்கிருந்து நாங்களாகவே கிளம்பிவிட்டோம். இரவு 12 மணிக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து எனக்கு போன் வந்தது. உதவி தேவைப்பட்டால் தெரிவிக்கும்படி சொன்னார்கள்.

A2 கோச்சில் என்னைத் தவிர தமிழகத்தை சேர்ந்த நான்கு குடும்பங்கள் இருந்தன. அவர்கள் யாருக்குமே காயம் எதுவுமில்லை. அதேபோல் A1 கோச்சில் இருந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று குடும்பங்கள் இருந்தன. அவர்களும் பாதுகாப்பாகவே இருந்தனர். அதேபோல் முதல் ஏசி பெட்டியில் இருந்த பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பில்லை” என்று கூறினார்

Maha

Next Post

திருச்சியில் 371 பெண் காவலர்களுக்கு பயிற்சி...

Sat Jun 3 , 2023
தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் சுமார் 3500 க்கு மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள எட்டு பயிற்சி பள்ளிகளில் இவர்களுக்கு தற்போது பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரம் திருச்சி அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 371 பெண் காவலர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து […]
police training

You May Like